இருநூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் களைகட்டும் கோடை விழா
நீலகிரி: கோடை விழாவின் சிறப்பம்சமாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மே 13 முதல் 20ஆம் தேதி வரை ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலாவும் 30ஆம் தேதியன்று பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"கடந்த இருநூறு ஆண்டுகால வரலாற்றில் ஊட்டியில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்படுகிறது. இதன் பின்னர் படிப்படியாக மருத்துவ ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படும்," என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனம் மூலம் ஊட்டி திடலில் இருந்து ஹெலிகாப்டர் சுற்றுலா மேற்கொள்ளப்படும். ஹெலிகாப்டரில் ஒரே சமயத்தில் ஆறு பேர் செல்ல முடியும். இந்த ஹெலிகாப்டர் பயணமானது பத்து நிமிடங்கள் நீடிக்கும் என்றும் சுமார் நாற்பது கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவன தகவலின்படி சுமார் 1,000 அடி உயரம் வரை பறந்து ஊட்டி நகரை கண்டு ரசிக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.7,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
ஊட்டி நகரம் உருவாகி சுமார் 200 ஆண்டுகளாகின்றன. இதையடுத்து இருநூறாவது ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது, ஊட்டியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், கோடை காலத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மலர் திருவிழா நடைபெற உள்ளது. எதிர்வரும் 19ஆம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார். இந்த ஆண்டு ஊட்டியில் கோடைவிழா இப்போதே களைகட்டி வருகிறது. கொரோனா நெருக்கடி காலத்துக்குப் பிறகு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் இந்த விழாவுக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் சுற்றுலா ஊட்டியில் நிலவும் கால நிலையைப் பொறுத்து செயல்படுத்தப்படும் என்றும் பலூன் திருவிழாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

