புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள கல்லூர் கிராமத்தில் மஞ்சு விரட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகளும் ஏராளமான காளையர்களும் கலந்துகொண்டனர்.
காளையர்களிடம் பிடி கொடுக்காமல் சீறிப் பாய்ந்த காளை ஒன்று அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளையர் ஒருவர் மீது முட்டியதில் அவர் உயிரிழந்தார்.
மேலும், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்காகச் சென்ற மீமிசல் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரையும் மற்றொரு காளை முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்த நவநீதகிருஷ்ணனின் உடலுக்கு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் திருமதி வந்திதா பாண்டே மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காவரின் மனைவிக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
இதனிடையே, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள், ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே, பாதுகாப்புப் பணியில் இருந்தபோது உயி ரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், தனது பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

