புதுடெல்லி: தமிழகத்துக்கான முதலீடுகளை திரட்டுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாத இறுதியில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் செல்ல இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் மே 23ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு ஏற்ற வகையில் பயணத் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களில் ஜப்பானிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு ஜப்பான், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
அனைத்துலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க துறைவாரியாக அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்துக்கான முதலீடுகளை திரட்டும் பொருட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய்க்கு பயணம் மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அங்கு தொழில் அதிபர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதன் பலனாக ரூ.2,600 கோடிக்கான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மீண்டும் முதலீடுகளை ஏற்க வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

