சென்னை: அண்மைய சில நாள்களாக சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தீவிரமடைந்துள்ளன என்றும் இதுவரை சுமார் நானூறு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் மெட்ரோ ரயில் திட்டம் மிக முக்கியமானதாகும்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், நான்கு, ஐந்தாவது வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் உயர்மட்டப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்விரு வழித்தடங்களுக்காக இதுவரை 400 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்ட சேவை மூலம் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது. எனினும் மேலும் சில வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால்தான் முழுப் பலன் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் , ரூ.63,246 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இரண்டாம் கட்டத்தில் 42.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கத்திலும் 76.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டத்திலும் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
அனைத்து பணிகளையும் எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது, 45 இடங்களில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில இடங்களில் இத்திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான பணிகள் வேகம் பெற்றுள்ளன எனவும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றுள் 18 உயர்மட்ட ரயில் நிலையங்கள் என்றும் 12 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"மெட்ரோ ரயில் சேவைக்காக ஏராளமான தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றுள் நானூறுக்கும் மேற்பட்ட தூண்களை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
"ஒரே சமயத்தில் காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லைதோட்டம் உள்ளிட்ட பல இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
"சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
"கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன," என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுவேகத்தில் இரண்டாம் கட்டத் திட்டப்பணிகள்; 2026க்குள் பணிகளை முடிக்க இலக்கு

