கோவை: கோவையில் கஞ்சா போதையுடன் இருந்த ஐந்து இளையர்கள், கண்ணில்பட்ட பொதுமக்களை எல்லாம் அரிவாளால் தாக்கினர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது வீடு ஒன்றில் திருநெல் வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளையர் தங்கியுள்ளார்.
இந்நிலையில், சிவாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக திருநெல்வேலியில் இருந்து இவரது ஐந்து நண்பர்கள் வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் மது அருந்தி, கஞ்சா பயன்படுத்தி போதையில் கூச்சலிட்டபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுநாள் காலையில் சிவா திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் இளையர்களைக் கண்டித்ததை அடுத்து கோபமடைந்த இளையர்கள் வீட்டின் உரிமையாளர்கள், போவோர் வருவோர், கண்ணாடி சன்னல்கள், கார்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நடந்த இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இளையர்களும் படுகாயமுற்ற பொதுமக்களும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

