சென்னை: கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு என நவீன கருவியை சென்னை ஐஐடி கல்வி நிலைய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்குப் பாராட்டுகள் குவிகின்றன.
தமிழகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது நச்சுப்புகை தாக்குவதால் தொழிலாளர்கள் பலியாவது தொடர்கதையாகிவிட்டது. அண்மையில்கூட மதுரையில் இதுபோன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில், இத்தகைய உயிரிழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை ஐஐடி மாணவர்கள் தங்கள் பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையில், கழிவுநீர்்த் தொட்டிகளை சுத்தப்படுத்த 'ரோபோ' தொழில்நுட்ப முறையில் புதிய அதிநவீன கருவியைக் கண்டுபிடித்து உள்ளனர்.
கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கெட்டியான கசடுகளை வெட்டி ஒரே மாதிரியாக மாற்றும் வகையில் ரோபோ இயந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. பின்னர் இந்த கருவி மூலம் கழிவுநீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து, அதை அகற்ற முடியும். இதன் மூலம் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது நச்சு வாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்க முடியும் என அம்மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தப் புதிய இயந்திரத்தின் அறிமுக விழா நடைபெற்றது.
இதில் கடந்த 2007ஆம் ஆண்டு கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியின்போது நச்சுப்புகை தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நாகம்மாளுக்கு அந்த இயந்திரத்தை மாணவர்கள் வழங்கினர்.
"இனிமேலும் மனித உயிர்கள் நச்சுப்புகை தாக்கி பறிபோகக்கூடாது. இந்த இயந்திரத்தைப் பெற்றுக்கொண்ட நாகம்மாள் தாம் வசிக்கும் பகுதியில் கழிவுநீரை அகற்ற அதைப் பயன்படுத்துவார்," என்றார் பேராசிரியர் பிரபு ராஜகோபால். இதையடுத்து மாணவர்க ளுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
படம்: தகவல் ஊடகம்

