பெரியபாளையம்: ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 250 மதுப்புட்டிகளைப் பறி
முதல் செய்த பெரியபாளையம் மதுவிலக்கு போலிசார் அதன் தொடர்பில் 12 பேரைக் கைது செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடப்பில் உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் மதுப்புட்டிகள் தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டு, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தடுப்பதற்காக தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஆகியவற்றில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்த 12 பேர் கைது செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

