உடல் உறுப்பு தானத்தில் 6வது முறையாக முதன்மை மாநிலமாக தமிழகம்; முதல்வர் பழனிசாமி பெருமிதம்

உடல் உறுப்பு தானத்தில் 6வது முறையாக முதன்மை மாநிலமாக தமிழகம்; முதல்வர் பழனிசாமி பெருமிதம்

2 mins read
9241d386-9950-45d6-8114-60b2e88eeb51
படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு விருது வழங்கியது குறித்து முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"நேற்று (நவம்பர் 27) நடைபெற்ற 11வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தொடர்ந்து 6வது முறையாக இவ்விருதினைப் பெறுகிறது. தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையிலும் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையிலும் செயல்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது, மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இச்சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேவைப்படும் உயரிய நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1,392 கொடையாளர்களிடமிருந்து 8,245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கொவிட்-19 பெரும் தொற்று காலத்திலும் சிறப்பு நெறிமுறைகளை உருவாக்கி, 97 உடலுறுப்புகளை 27 உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று, தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பதையும் முதல்வர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்