திருச்சி: வருமான வரித்துறையினர் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே சென்று நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஒரு சார்பான முறையில் பழிவாங்கும் வகையில் நடந்துகொள்வதாகச் சாடினார்.
'வாக்கி டாக்கி' ஊழல் வழக்கை பார்க்கும்போது மாநில அரசின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், டிஎன்பிஎஸ்சி ஊழலில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை முறையாக விசாரணை நடத்தி தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
"குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் இங்குள்ள இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்நாட்டு அரசால் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலும் பலவிதமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதை எல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும்," என்றார் நல்லக்கண்ணு. தமிழகம் முழுவதும் இந்தாண்டு நெல் விளைச்சல் நன்றாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படாததாலும், விளைந்த நெல்லை வாங்க ஆளில்லாததாலும் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

