தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலுக்கும் ஆதரவு

தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலுக்கும் ஆதரவு

2 mins read
ca0e0c81-ba35-4625-9460-a76e267fbdec
தஞ்சைப் பெரிய கோயிலில் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. படம்: இணையம் -
multi-img1 of 2
Google News Preferred Icon

தஞ்சைப் பெரிய கோயிலில் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதில் வழிபாடுகளைத் தமிழில் நடத்த வலியுறுத்தி நாளை (ஜனவரி 22) தஞ்சாவூரில் வேண்டுகோள் மாநாடு நடைபெறும் என தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

"இந்த மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்," என்றார் அவர்.

இந்த நிலையில், சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டு முறைகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். "தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரே இவ்வாறு கூறலாமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் திரு மணியரசன்.

காலங்காலமாக தமிழ்நாட்டில் சிவநெறி மற்றும் திருமால் நெறி கோயில்களில் தமிழில்தான் கருவறை அர்ச்சனைகளும் வழிபாடுகளும் நடந்திருக்கின்றன. இந்த மரபை இடைமறித்து மாற்றி சம்ஸ்கிருதத்தை ஒரு சாரார் இங்குள்ள கோயில்களில் திணித்தார்கள். அந்த ஆக்கிரமிப்பை நீக்கி தமிழ் வழிபாட்டு அர்ச்சனையும், குடமுழுக்கும் நடைபெற வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள கோரிக்கை.

இந்துசமய அறநிலையத் துறை, தமிழில் அா்ச்சனை செய்வதற்கான ஆணையை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் "இந்து சமயம் ஒற்றைத் தெய்வ வழிபாட்டை, ஒற்றை மொழி வழிபாட்டைக் கொண்டதல்ல, பல்வேறு வகையறா கோயில்களும், வழிபாடுகளும் இருக்கின்றன. அந்தந்த வகையறாக் கோயிலின் மரபுப்படி அர்ச்சகர்களை அமர்த்தவும், அர்ச்சனை மொழியைத் தேர்வு செய்துகொள்ளவும் உரிமை உண்டு' என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை சிறிதும் சம்ஸ்கிருதக் கலப்பின்றி தமிழ்வழியில் மட்டுமே நடத்த வேண்டும்," என திரு மணியரசன் தெரிவித்தார்.

தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டும் என்பதை இணையவாசிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

#தமிழ்முரசு #தஞ்சைபெரியகோயில் #குடமுழுக்கு #தமிழில்குடமுழுக்கு

குறிப்புச் சொற்கள்
தமிழ்