'டெல்லி மாசு சென்னையைப் பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவே'

2 mins read

சென்னை: டெல்லியில் அபாயக் கட்டத்தை எட்டியிருக்கும் காற்று மாசுபாடு சென்னையையும் பாதிக்கும் என்று தமிழ்நாடு வானிலை அதிகாரி பிரதீப் ஜான் கூறியிருப்பதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மறுப்பு தெரி வித்துள்ளது.

"டெல்லி மாசு சென்னையை பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவே," என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் நேற்று காலை முதலே மாசுக் காற்று போன்ற புகைமண்டலம் வானில் தென்பட்ட தாகவும் நேரம் செல்ல செல்ல சென்னையில் மாசுபோன்ற புகை மண்டலம் அதிகரித்து காணப்படு வதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு 'வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் "டெல்லியை திணறடித்துக்கொண்டு இருக்கும் மாசுக் காற்று அடுத்தவாரம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளையும் பாதிக்கும். தமிழகம், சென்னையையும் கடுமையாகப் பாதிக்கும்," என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் எஸ். பாலச் சந்திரன் கூறுகையில், "டெல்லியைப் பாதித்து இருக்கும் மாசுக் காற்று சென்னையைத் தாக்குவதற்கான வாய்ப்பு இல்லை.

"டெல்லி தொலைதூரத்தில் உள்ளது. டெல்லி 30 டிகிரி பூமத்திய ரேகையிலும் தமிழ்நாடு 8-10 டிகிரி பூமத்திய ரேகையிலும் உள்ளன. இதற்கு இடையில் மலைகளும் உள்ளன. டெல்லி மாசுக் காற்று எந்த வகையிலும் தமிழகத்தையோ சென்னையையோ தாக்காது,'' என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் தலைவர் ஒய்இஏ ராஜ் கூறுகையில், "தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெங்களூருவை மாசுக் காற்று பாதித்து இருந்தால் மேற்கில் இருந்து வீசும் காற்று வழியாக சென்னைக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் வானில் இருக்கும் டெல்லி மாசுக் காற்று சென்னை வருவதற்கான வாய்ப்பில்லை,'' என்று கூறியுள்ளார்.