இணைய விளையாட்டுகளைத் தடைசெய்ய மாநில அரசுகளே சட்டம் விதிக்கலாம்: மத்திய அரசு

இணைய விளையாட்டுகளைத் தடைசெய்ய மாநில அரசுகளே சட்டம் விதிக்கலாம்: மத்திய அரசு

2 mins read
cd34f7c2-c32e-419f-a11c-b230343c4e84
இந்திய தகவல், தொடர்பு அமைச்சர் அ‌ஷ்வினி வை‌ஷ்ணவ். - படம்: dainikprabhat.com / இணையம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இணைய விளையாட்டுகள், சூதாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவது மாநில அரசாங்கங்களின் பொறுப்பு என்றும் இதுவரை 1,410 இணைய விளையாட்டுத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சர் அ‌ஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இணைய விளையாட்டுகள், பந்தயம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திரு வைஷ்ணவ், இணைய விளையாட்டுத் தளங்களுக்குத் தடை விதிப்பது குறித்து மாநில அரசுகள் சட்டங்களை இயற்றலாம் என்று கூறினார். அதோடு, மத்திய அரசின் தார்மீக அதிகாரத்தைக் கேள்வி கேட்க தயாநிதி மாறனுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று திரு வை‌ஷ்ணவ் சாடினார்.

தமிழ்நாட்டில் இணைய விளையாட்டுகள் காரணமாக ஏராளமானோர் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கூறப்பட்டுவரும் நிலையில் திரு தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “நமது நாடு கூட்டாட்சி முறையின் அடிப்படையில் செயல்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பட்டியல் இரண்டில் வரும் மாநில அலுவல்கள் தொடர்பான பிரிவுகளுக்குள் சூதாட்டம், பந்தயப் பிடிப்பு போன்றவை அடங்குகின்றன. எனவே, அவற்றைக் கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்குவது என்பது மாநில அரசுகளின் சட்டப்பூர்வ அதிகாரத்திற்குட்பட்டது.

“ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் அசைவின்றி இருக்கவில்லை. இதுவரை பெறப்பட்ட புகார்களின் தொடர்பில் இதுபோன்ற 1,410 விளையாட்டுத் தளங்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளன,” என்று திரு வை‌ஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டப் பிரிவு ஒன்றின்கீழ் இதன் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்