சென்னை: முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’யில் இடம்பெற்றுள்ள பெண் காவலர்கள், அதிகாரிகளுக்குச் சிறப்புச் சீருடை தயாராகியுள்ளது.
வன்கொடுமை உட்பட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களைத் தவிர்க்க சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் எனத் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைத்த பின்னர் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்பட்டது. இந்தச் சிறப்புப் படைக்கு ஐஜி பவானீஸ்வரி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மேலும், ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு ஆய்வாளர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் ஆகியோரும் இப்படையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அதிரடிப்படைக்குக் காவல்துறையின் மற்ற பிரிவுகளுக்கான சீருடையில் இருந்து மாறுபட்டு தனித்துவமாகத் தெரியும் வகையில் சிறப்புச் சீருடை, இலச்சினை (சின்னம்-லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ளது.
துணிச்சல், வேகம், அறிவுத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சின்னத்தில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு நிறத் தொப்பி, இடுப்புப் பட்டை, நீல நிறச் சட்டை, காக்கி கால் சட்டை எனப் பல்வேறு வெளிநாடுகளில் பெண் காவலர்களுக்கு வழங்கப்படும் சீருடைக்கு இணையாக சிங்கப்பெண் அதிரடிப் படையினருக்கும் சீருடை உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலும், சுற்றுக்காவல் பணிகளை எளிதாக்கும் வகையிலும் இந்தச் சீருடைகள் நவீன தொழில்நுட்பத்துடன் தைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்வர் விஜய் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

