தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் பெரும் சரிவு

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் பெரும் சரிவு

2 mins read
9e583857-7f30-4d0b-9d31-a58eceb39ea4
தமிழகத்தில் விவசாயத்திற்காக ஏறக்குறைய 21 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுவதாக மாநில நிலத்தடி, மேற்பரப்பு நீர்வளத் தரவு மையம் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஐ.எஃப்.பி.ஆர்.ஐ
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாகவும், ஆக அதிகமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்மட்டம் 6.77 மீட்டர் குறைந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் விவசாயத்திற்காக ஏறக்குறைய 21 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுவதாக மாநில நிலத்தடி, மேற்பரப்பு நீர்வளத் தரவு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மையம் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டு புள்ளி விவரங்களை வெளியிடுகிறது.

அண்மையப் புள்ளி விவரங்களின்படி, அரியலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் ஏறக்குறைய 28.7 மீட்டராக உள்ளது.

கோவையில் 20.89 மீட்டர், கடலூரில் 19.03 மீட்டர், நாமக்கல்லில் 17.39 மீட்டர், புதுக்கோட்டையில் 16.06 மீட்டர், ஈரோட்டில் 15.52 மீட்டர், கரூரில் 13.52 மீட்டர், தஞ்சாவூரில் 12.61 மீட்டரில் சராசரியாக நிலத்தடி நீர் உள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் பல மாவட்டங்களில் நீர்மட்டம் வெகுவாகச் சரிந்துள்ளதாக புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன.

வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர் சரிவடையவில்லை. மற்ற மாவட்டங்களில் நிலைமை கவலை அளிப்பதாக மாநில நிலத்தடி, மேற்பரப்பு நீர்வளத் தரவு மையம் கூறியுள்ளது.

ஆக அதிகமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு 5.36 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், நடப்பாண்டு ஜூன் மாதம் 12.13 மீட்டராக பதிவாகி உள்ளது. அதாவது, ஒரேயாண்டில் 6.77 மீட்டர் ஆழத்திற்கு நிலத்தடி நீர் சென்றிருப்பதை அதிகாரிகள் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் விவசாயத்திற்காக 21 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படும் நிலையில், பூமிக்குள் செல்லும் மழைநீரை அதன் ஊறும் வேகத்தைவிட எட்டு மடங்கு அதிவேகமாக வெளியே உறிஞ்சி எடுப்பது நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிவடைய முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரசு செயல்படுத்தும் நீர் மேலாண்மை திட்டங்கள் மட்டும் போதாது என்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்