மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; தாயாருடன் மருத்துவர் கைது

1 mins read
33e291cf-c757-4467-8ff0-c32e7beb7fd9
கைது செய்யப்பட்ட மருத்துவர் சாம்சன் டேனியல், அவரது தாயார் கிரேஸ் சகாயராணி. - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட அரசு மருத்துவரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அவரது தாயும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மேலப்புதூர் பகுதியில் செயல்படும், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவுத் தொடக்கப்பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

அவர்களில் 40 பேர் விடுதியில் தங்கியுள்ளனர்.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கிரேஸ் சகாயராணி, 54. அவரது மகன் சாம்சன் டேனியல், 31, லால்குடி வட்டம் அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல அவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக மருத்துவர் சாம்சன் டேனியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணுக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

காவல்துறையினர் மருத்துவர் சாம்சன் டேனியலை கைது செய்தனர். புகார் அளித்தும் பள்ளி தலைமை ஆசிரியையும், மருத்துவரின் தாயாருமான கிரேஸ் சகாயராணி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.

அதனால், இச்சம்பவத்தை மறைத்ததற்காக அவரும் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்