ஒரு மாத தலைமறைவுக்குப் பின் செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு வருகை

ஒரு மாத தலைமறைவுக்குப் பின் செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு வருகை

1 mins read
fdd06e1b-37cd-4faa-8e44-670dca72dd77
அமைச்­சர் செந்தில் பாலாஜி. - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, முன்பிணை உத்தரவைப் பெறுவதற்காகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை நேரில் முன்னிலையானார்.

முன்பிணை கிடைத்த பிறகு, ஒரு மாதத்திற்குப் பின் அவர் முதன்முறையாகப் பொதுவெளியில் காணப்பட்டார்.

சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது கொறடா உத்தரவை மீறி வாக்களிக்க, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் திருநாவுக்கரசு உட்பட ஒன்பது பேரைத் திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி, விசாரணைக்கு முன்னிலையாகும்படி காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் முன்பிணை கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் நிபந்தனை முன்பிணை வழங்கி ஜூலை 8ஆம் தேதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் 15 நாள்களுக்குள் நேரில் முன்னிலையாகி முன்பிணையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை காலை, மாலை இரு வேளைகளிலும் விசாரணை அதிகாரி முன்பு முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, முன்பிணை உத்தரவைப் பெறுவதற்காக செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவர் நீதிபதி முன்பு முன்னிலையாகி முன்பிணை உத்தரவைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்