கும்பகோணம்: கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் (திமுக) தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் (தவெக) இடையே ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துக்காபாளையத்தெரு 17வது வார்டு பகுதியில் தவெக கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.
அதே தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கும்பகோணத்தில் திமுக சார்பில் நான்காவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவாக, மாநகராட்சித் துணை மேயர் சு.ப. தமிழழகன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, வாக்காளர்களுக்கு ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்பட்டு, தவெகவுக்கு வாக்களிக்கக்கூடாது என்று திமுகவினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதுகுறித்துத் தவெகவினர் கேட்டபோது, இரு தரப்பினரிடையே மோதல் உருவாகிக் கைகலப்பானது.
துணை மேயர் தமிழழகன், தவெக மாவட்டச் செயலாளரின் ஆதரவாளரான சந்திரனையும் நிர்வாகிகளையும் தாக்கிக் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை அறுத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் 17வது வார்டு திமுக செயலாளர் சபாபதி உள்பட இருவரும், தவெக மாநகரச் செயலாளர் முருகானந்தமும் பலத்த காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுவலகரிடம் புகார் அளித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழழகனை உடனடியாகக் கைதுசெய்யக் கோரி காந்தி பூங்கா அருகில் தவெக வேட்பாளர் வினோத் தலைமையில் அறுந்த தங்கச் சங்கிலியைக் காட்டிச் சாலை மறியல் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

