இரு மொழிக் கொள்கைக்கு எதிரான பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது: தமிழக அரசு

இரு மொழிக் கொள்கைக்கு எதிரான பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது: தமிழக அரசு

2 mins read
b555012f-872e-420e-9ad9-e75e1232877d
தமிழகத்தில், உறைவிட வசதியுடன் அரசின் மாதிரி பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.இரு மொழிக் கொள்கைக்கு எதிராக இருப்பதால், ஜவஹர் நவோதயாப் பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. - படம்: ஓப்இந்தியா
Google News Preferred Icon

சென்னை: இரு மொழிக் கொள்கைக்கு எதிராக இருப்பதால், ஜவஹர் நவோதயாப் பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரியது தொடர்பான மனு, உச்ச நீதிமன்ற அமர்வில் புதன்கிழமை (மார்ச் 11) விசாரணைக்கு வந்ததையடுத்து தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஹிந்தி, ஆங்கிலம், மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையால் வரையறுக்கப்பட்டு உள்ளது. இது, தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது என்பதால், அந்தப் பள்ளிகளை அனுமதிக்க முடியாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 38 உறைவிட வசதியுடன் அரசின் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம், அனைத்து நிலையில் உள்ள மக்களும் எளிதாக அணுகும் வகையில் தரமான கல்வி வழங்கப்படுகிறது.

கூடுதலாக கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்குப் பதிலாக, மத்திய அரசு தன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதை செய்யாமல் கூடுதலாக கல்வி நிறுவனங்களை திறப்பது, நிதி சிக்கலை ஏற்படுத்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேருவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1986ல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியால் தொடங்கப்பட்ட ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், நிதியுதவியிலும் செயல்படுகின்றன. முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலம் அம்ராவதியில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. சிபிஎஸ்இ அமைப்புடன் இணைந்து செயல்படும் நவோதயா பள்ளிகளில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் இப்பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்