முதல் பரிசை வென்ற காளைக்கு மேளவாத்தியத்துடன் வரவேற்பு

முதல் பரிசை வென்ற காளைக்கு மேளவாத்தியத்துடன் வரவேற்பு

1 mins read
6bb3e99d-74f4-4fb3-9e2a-d11b7f8fec8e
அலங்காநல்லூர் மஞ்சுவிரட்டில் யாரிடமும் பிடிபடாமல் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு சொந்த ஊரான அயோத்தியாப்பட்டணம் திரும்பிய வீரப்பன் என்ற காளையையும் அதன் சொந்தக்காரர் மோகன்ராஜையும் ஊர் மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர். - படங்கள்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

சேலம்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்களின் பிடிகளுக்கு அடங்காமல் அனைவரையும் தூக்கியெறிந்து விட்டு வீரநடை போட்டு முதல் பரிசு வென்ற வீரப்பன் என்னும் காளைக்கு அதன் சொந்த ஊரில் மேளவாத்தியம் முழங்க ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசாக, சேலம் அயோத்தியா பட்டினத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான வீரப்பன் என்ற காளைக்கு டிராக்டர் மற்றும் கன்றுடன் நாட்டு பசு வழங்கப்பட்டது.

சிற்றூர் குழு சார்பில் முனியாண்டி, அரியமலை, வலசை கருப்பசாமி கோவில்களை சேர்ந்த மூன்று காளைகளுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்ட பின் காளைகள் அவிழ்க்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு வண்ணச் சீருடையில், தலா 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை ரவுண்டு கட்டி வீரர்கள் விரட்டி பிடித்தனர். தில் காட்டிய காளைகள் வீரர்களை முட்டித் துாக்கி எறிந்து பறக்க விட்டன. வெற்றி பெற்ற வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, தங்க மோதிரம், சைக்கிள், அண்டா, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் சனிக்கிழமை காலை காளையுடன் மோகன்ராஜ் மற்றும் குழுவினர் சொந்த ஊருக்குத் திரும்பினர். சேலம் மாவட்டத்தின் அயோத்தியாப்பட்டணத்தில் அவ்வூர் மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காளைக்கும் அதன் உரிமையாளருக்கும் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் ஊரெங்கும் பட்டாசு வெடித்து ஊர் மக்கள் வரவேற்பு அளித்தனர். அயோத்தியாப்பட்டணம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று, மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

குறிப்புச் சொற்கள்