புரட்சி என்னும் புதிய கனவு

புரட்சி என்னும் புதிய கனவு

3 mins read
01702ac5-7376-4247-a29c-e9d9b5f232af
நான்கு முனைப் போட்டிக்கான பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது. - படம்: ஒன் இந்தியா
Google News Preferred Icon

புதிய கட்சியுடன் அரசியல் களம் கண்ட பின்னர் தயாரிக்கப்பட்ட எம்ஜிஆரின் முதல் படமான உலகம் சுற்றும் வாலிபனை வெளியிடவிடாமல் 1973ல் ஏராளமான இடைஞ்சல்கள் தரப்பட்டன. மேடைகளில் அவரது பெயரை ஆளும்கட்சியினர் உச்சரிக்காமல் நேரடி விமர்சனத்தைத் தவிர்த்தனர்.

2026ல் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்குச் சிக்கல். விஜய்யை நேரடியாக விமர்சிப்பதை ஆளும்கட்சித் தலைவர்கள் தவிர்க்கின்றனர்.

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நடுநிலையாளர்கள், எம்ஜிஆரைப்போல விஜய் அரசியல் புரட்சி ஏற்படுத்தினால் ஆச்சரியம்தான்; ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு என்கின்றனர். எம்ஜிஆருக்கு எல்லா வயதுப் பிரிவினரின் ஆதரவும் பெருகி இருந்த காலம் அது. தடைகளை உடைத்து எம்ஜிஆர் வென்றபோது “மக்கள் பின்னணி எழுச்சி ஆகுமானால், அது ஒரு பெருங்கூட்டமாகத் திரளும். எம்ஜிஆர் விஷயத்தில் அதுதான் நடந்தது,” என்றார் கவிஞர் கண்ணதாசன்.

நடப்பு தேர்தல் களத்தில், “பயமில்லை, பயமில்லை என்று சொல்வதே பயத்தின் அறிகுறிதான். தவெகவைக் கண்டு பயப்படுவது திமுக மட்டுமே,” என்கிறார் பத்திரிகையாளர் பாகி.

திமுகவின் உத்தியில் நடைபெற்றிருக்கும் தலைகீழ் மாற்றம் அவரது கூற்றுக்குத் தலையாட்டுகிறது. திமுகவின் வெற்றியைத் தடுக்கும் ஓட்டைகளைக் கண்டறிந்து அடைப்பதற்காகவே பென் (Pen), ஐபேக் (I-PAC), ஷோடைம் (Showtime) என்னும் அரசியல் ஆலோசனை அமைப்புகள் இறக்கிவிடப்பட்டுள்ளன. வாய்ப்பு அளிக்கப்படாத 60 திமுக எம்எல்ஏக்களின் அதிருப்தியைப் போக்க அவர்களை ஸ்டாலினே நேரடியாக அழைத்து பிரசாரம் செய்யச் சொல்வதும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேரடியாகக் களத்தில் இறங்கி வேலைசெய்வதும் திமுக தேர்தல் களம் கண்டிராத புதுமை.

ஆக, தமிழ்நாட்டில் இதுவரை 15 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களைச் சந்தித்த பேரியக்கமான திமுக, கத்துக்குட்டி தவெகவைக் கண்டு பதறுகிறதா? என்று கேட்கும் ஊடகத்தினர், தவெக கொடியிலிருக்கும் யானையைக் குறிப்பிட்டு, பலம்பொருந்திய யானை, படத்திலிருக்கும் யானையைக் கண்டு பயப்படுகிறதே என்று ஆச்சரியப்படுகின்றனர்.

18-39 வயதுப் பிரிவிலுள்ளோர் 2.38 கோடிப் பேர். மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (51%) பெண்கள். இவர்களே வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். எனவேதான், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே 1.31 கோடிப் பெண்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் அரசு சார்பில் திடீரென ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. “எனது வரவால் உங்களுக்கு ரூ.5,000 கிடைத்திருக்கிறது, பெற்றுக்கொள்ளுங்கள்,” என்று சொன்ன விஜய், அந்தப் பணம் தவெகமீதான பெண்களின் ஆதரவைப் பாதித்துவிடக்கூடாது என்பதைக் கருதி அவரும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை அறிவித்ததாகச் சொல்கிறார்கள்.

இரு பெரும் கழகங்களை இளைய சமுதாயத்தினரில் பெரும்பாலானோர் விரும்பவில்லை என்பதை ‘சௌத்ஃபர்ஸ்ட்’ செய்தித்தளம் வெளியிட்டிருக்கும் கருத்தாய்வு காட்டுகிறது. கொங்கு மண்டலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், புதியவர் என்பதால் விஜய்க்கு வாக்களிக்க இருப்பதாக இளம்பெண்கள் பலர் சொல்லி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் கலாசாரம் ஆகிய இரண்டிலிருந்தும் தமிழகத்தை விஜய் காப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை. தனித்துப் போட்டியிடும் விஜய்யின் கதாநாயகத் துணிச்சலும் சில இளையர்களைக் கவர்ந்துள்ளது.

‘தொடர்ந்து இருமுறை ஆட்சி செய்த திமுக’ என்னும் திமுகவின் வரலாறுக்குப் பதில் தமிழகம் இதுவரை கண்டிராத புதிய வரலாறு படைக்கப்படும் சூழல் நிலவுகிறதா என்னும் கேள்வி உலா வருகிறது.

அந்தக் கேள்விக்கு, 20 விழுக்காட்டுக்கு மேற்பட்ட வாக்குகளை தவெக அள்ளினால் மட்டுமே திமுகவுக்குச் சோதனை வரும் என ‘சி வோட்டர்-என்டிடிவி’ அண்மையில் வெளியிட்ட ஆழமான கணிப்பு விடையாக உள்ளது. -திருநா

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்