விமானத்தில் மீண்டும் மீண்டும் கோளாறு; சென்னை விமானநிலையத்தில் பயணிகள் அவதி

விமானத்தில் மீண்டும் மீண்டும் கோளாறு; சென்னை விமானநிலையத்தில் பயணிகள் அவதி

2 mins read
c91aecba-745f-4b52-9891-2287b3e7cee4
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் செய்வதறியாது தவித்த 180 பயணிகள். - படம்: டிடி நெக்ஸ்ட்
Google News Preferred Icon

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அந்த விமானத்தின் பயணிகள் ஏறத்தாழ 12 மணி நேரம் அவதிக்குள்ளானார்கள்.

வெள்ளிக்கிழமை (மே 22) இரவு 7.40 மணிக்கு சென்னையிலிருந்து கோல்கத்தா புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இரவு 10.15 மணியளவில் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது அதில் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

அதனால் அந்த இடத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டு பழுதுபார்ப்புப் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பழுதுபார்ப்புப் பணிக்குப் பின்னர் இரவு 11.30 மணிக்கு விமானம் மீண்டும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒருவழியாக இரவு. 11.50 மணியளவில் விமானம் புறப்பட்டு தரையில் உருண்டு செல்லத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மீண்டும் இயந்திரக் கோளாறு இருப்பதாக அறிவித்த விமானி அவசரமாக அதனை நிறுத்தினார்.

அதன் பிறகு அந்த விமானம் எப்போது புறப்படும் என்று தெரியாததால் விமானத்திலிருந்து 180 பயணிகளும் 7 பணியாளர்களும் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

பயணிகளில் எரிச்சலடைந்த சிலர், பயணத்தை ரத்துசெய்துவிட்டு விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பினர். வேறுசிலர் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றினர். எஞ்சிய பயணிகளை சனிக்கிழமை காலை அதே விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ததாக அதிகாரிகள் கூறினர்.

சூறைக்காற்றால் விமானங்கள் தாமதம்

இந்நிலையில், சனிக்கிழமை காலை சென்னை விமான நிலையப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் பத்துக்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்குச் சென்றது. அதேபோல துபாயிலும் அபுதாபியிலும் இருந்து வந்த விமானங்கள் சூறைக்காற்றால் சென்னையில் தாமதமாகத் தரையிறங்கின.

அதேபோல, டெல்லி, கோல்கத்தா, பெங்களூரு, கோவை மற்றும் மதுரைக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

குறிப்புச் சொற்கள்