செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் சோதனை

செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் சோதனை

2 mins read
d15ddce6-6ca4-4642-95b7-2759b88d576b
காலை 7 மணிக்கு இரண்டு வாகனங்களில் வந்திறங்கிய அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

புதன்கிழமை (ஜூலை 29) காலை தொடங்கி மாலை வரை சோதனை நீடித்ததாகத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் செந்தில் பாலாஜி.

அப்போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், கரூர் அருகே உள்ள ராமேஸ்வரபட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் புதன்கிழமை (ஜூலை 29) காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காலை 7 மணிக்கு இரண்டு வாகனங்களில் வந்திறங்கிய அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், செந்தில் பாலாஜியின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியம் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் கரூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதை இந்து தமிழ் ஊடகச் செய்தி உறுதி செய்தது.

சோதனை நடத்தப்பட்ட இடங்களில் ஒன்றான சக்தி உணவகத்தின் உரிமையாளர்கள் கார்த்தி, ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கெனவே ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குதிரை பேரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு உள்ளதாக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது‌.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திமுகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் டிஆர் பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) காலை முதல் நடைபெற்ற சோதனையின்போது ஏதேனும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா என்பது குறித்த அதிகாரபூர்வ விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

எனினும் ஆட்சிக் கவிழ்ப்பு வழக்குக்கும் இந்தச் சோதனை நடவடிக்கைக்கும் தொடர்புள்ளதாகத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்