சென்னை: சென்னையின் பிரபலமான கடலோர சாலையான கிழக்குக் கடற்கரைச் சாலையில் வீடு கட்டிய பிரமுகர்கள் உட்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்குக் கடற்கரை சாலையில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வழக்கில் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். இவற்றை வரும் மே மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்குச் கடற்கரை சாலையில், நீலாங்கரை முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் பங்களாக்கள், உல்லாச விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
விதிகளை மீறிய இந்த கட்டடங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2018ஆம் ஆண்டில் 798 கட்டட உரிமையாளர்களுக்கு எதிராக மாநகராட்சி எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியது.
இதில், துணை முதல்வர் உதயநிதி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.
ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், இந்த வழக்குகள் நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதிர்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு தரப்பில் மாநகராட்சி எச்சரிக்கைக் கடிதத்தை எதிர்த்து 798 உரிமையாளர்களில் 440 பேர் அரசிடம் மேல்முறையீடு செய்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதில், 84 மேல்முறையீடுகள் முடித்து வைக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் மீதமுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து, கட்டட உரிமையாளர்கள் தரப்பு விளக்கம் அளிக்க மார்ச் 30 வரை அவகாசம் வழங்கினர்.
பின்னர், வரும் மே 31க்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக, சென்னையின் நீண்ட கடற்கரைப் பகுதியை, அரிய வகை ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அவசியமானது. எனவே, உத்தண்டிக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டடங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

