சென்னை: மணல், கனிமவளக் கொள்ளையைத் தடுப்பது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடர்பாக புகார் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமவளக் கொள்ளை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது உத்தரவில் குறிப்பிட்டது.
மணல் மற்றும் கனிமவளக் கொள்ளை குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சட்டவிரோத மணல் மற்றும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது மாநில புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையர் சார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2025 நவம்பர் வரை மொத்தம் 1,439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.
எனினும், எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
“ஐந்து கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக கனிமவளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது. அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு கனிமவளக் கொள்ளை கும்பல் மாபியா போல் செயல்படுகிறது,” என்றும் இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில், தாது மணல் அதிக அளவில் உள்ளது.
குறிப்பாக, கதிரியக்கத் தன்மை உடைய கனிமங்கள், அதிக விலை மதிப்புள்ள தாது உப்புகள் ஆகியன இப்பகுதிகளில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதைப் பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள், பல்வேறு நாடுகளுக்கு தாது மணலைச் சட்ட விரோதமாக அனுப்பி வைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

