வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்

வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்

2 mins read
f7321667-e681-49c7-86a4-2c11d3b283e9
பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாகவும் இதையடுத்து மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பை சீராக நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவும், ரேசன் கடைகளில் குடும்ப அட்டைக்கு இரண்டு கிலோ அரிசி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களாலும் வறுமை அகற்றப்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மத்திய அரசின் ஆய்வு வாயிலாக வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் கடந்த 40 மாதங்களில் மாதாந்திர பொது விநியோகத்திட்ட குறைதீர்ப்பு முகாம்கள் மூலம் 183,610 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

“கொரோனா காலத்தில் 2.08 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், ரேஷன் கடைகள் மூலம் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. புதிதாக 1,666 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

“மாநில, மாவட்ட அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு, மக்களிடையே விழிப்புணர்வு வளர்க்கப்பட்டது. நெல் கொள்முதலில் ‘ஆன்லைன்’ பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 1.08 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

”அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விருப்ப அடிப்படையில், அரிசிக்கு பதில் கோதுமை வழங்கப்படுகிறது.

“டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்கீழ், அதிக எண்ணிக்கையில் சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்கு மத்திய அரசு முதல் பரிசு வழங்கியுள்ளது,” என்றும் அரசு செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்