ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம் தொடர்பில் கட்சியினர் மோதல்

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம் தொடர்பில் கட்சியினர் மோதல்

2 mins read
77f93938-6879-43d4-9563-1ee246237d7d
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் கறுப்புச் சட்டை அணிந்து மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

மதுரை: மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம் தொடர்பில் கட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நடந்த கூட்டத்தில் மேயர் வ. இந்திராணி உரையாற்றத் தொடங்கியதும் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக முழக்கங்களை எழுப்பி, மேயர் இருக்கையை நோக்கி முற்றுகையிட்டனர். இதனிடையே திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களை வழிமறித்தனர்.

இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கூட்டம் தொடர்ந்தது.

மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்கள், 100 வார்டுகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

வரி விதிப்பு முறைகேட்டில் திமுகவைச் சேர்ந்த மண்டலத் தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மண்டலத் தலைவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து ஏழு பேரை பதவி விலகுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய வருவாய் உதவியாளர்கள், கணினி இயக்குபவர் உள்ளிட்ட 55 பேரிடம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர், மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்