50 லட்சம் பேருக்கு பிரியாணி விருந்து அளிக்கத் தயாராகும் கட்சிகள்

50 லட்சம் பேருக்கு பிரியாணி விருந்து அளிக்கத் தயாராகும் கட்சிகள்

1 mins read
61a413e0-4bca-475c-9ef8-9dce5693a833
மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அங்கேயே பிரியாணி சுடச்சுட விநியோகிக்கப்பட்டது. - கோப்புப் படம்: விகடன்
multi-img1 of 2

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது மாநிலம் முழுவதும் 50 லட்சம் பேருக்கு பிரியாணி விருந்து அளிக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் அக்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளன.

தமிழகத்தில் 75,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகளும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளும் வாக்குச்சாவடி முகவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பு அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, அங்கு அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முறையாக நடைபெறுகின்றனவா, அன்றிரவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனவா என்பதைக் கவனிப்பது வாக்குச்சாவடி முகவர்களின் முக்கியப் பணியாகும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கட்சி அலுவலர்கள், முகவர்கள், வாக்குச்சாவடிக்கு வெளியே கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுபவர்கள் என, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் குறைந்தபட்சம் நூறு பேருக்காவது மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

அந்த வகையில், 50 லட்சம் பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்படும் எனத் தெரிகிறது. உணவகங்களில் பிரியாணி வாங்கினால் செலவு அதிகரிக்கும் என்பதால் பல வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட சமையல் கலைஞர்களிடம் ‘ஆர்டர்’ கொடுத்துள்ளனர்.

தமிழகக் தேர்தல் திருவிழாவின் முக்கிய அங்கமான பிரியாணி விருந்து வழக்கம்போல் இந்த ஆண்டும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்