‘வீட்டுக்கு ஒரு சோலார்’ திட்டம்: செயலியுடன் கூடிய கருவி அறிமுகம்

‘வீட்டுக்கு ஒரு சோலார்’ திட்டம்: செயலியுடன் கூடிய கருவி அறிமுகம்

2 mins read
eb0cc1a4-1ac8-413a-a184-bd3681a3ffa8
தமிழ்நாட்டில் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பசுமை எரிசக்தி கழகம் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. - படம்: சோலார்.காம்

சென்னை: தமிழகத்தில் ‘வீட்டுக்கு ஒரு சோலார்’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநிலப் போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சூரியசக்தி வழிகாட்டி செயலியுடன் கூடிய புதிய மேற்கூரை கருவி அறிமுகமாகி உள்ளது. அக்கருவியின் பயன்பாட்டை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பசுமை எரிசக்திக் கழகம் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழகத்தில் சூரிய மின்னாற்றலின் அதிகபட்ச மின் உற்பத்தி 6,731 மெகா வாட்டாக பதிவானது‌.

இதில் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி (சோலார்) திட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் வரை 1,302 மெகா வாட் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘வீட்டுக்கு ஒரு சோலார்’ என்ற புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் தங்கள் வீட்டு மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பை நிறுவ விரும்புவோர் அரசிடம் விண்ணப்பம் அளிக்கலாம். இதற்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கூரை சோலார் வழிகாட்டி செயலியுடன் கூடிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கூரை சூரிய சக்தி மூலம் 11.64 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 60 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செயலியுடன் கூடிய கருவியானது மின் நுகர்வோருக்கு பல வகையிலும் பயனளிக்கும்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தி நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணைப் பதிவிட்டவுடன் தங்கள் வீட்டு மாடியில் எவ்வளவு சூரிய சக்தி மின் திறனுக்கான அமைப்பை நிறுவலாம், அதற்குத் தேவைப்படும் பிற அம்சங்கள், செலவுகள் போன்ற விவரங்கள் உடனுக்குடன் தெரிய‌வரும்.

மேலும், இதுவரை நுகர்வோர் செலுத்தி வந்த மின்கட்டணம் சூரிய மின்னாற்றல் பயன்பாட்டுக்குப் பிறகு எவ்வளவு குறைந்துள்ளது என்பதையும் கணக்கிட‌ முடியும்.

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்