சென்னை: பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வழக்குப் பதிவு செய்வது, புலன் விசாரணையில் ஈடுபடுவது ஆகிய பணிகளை சிங்கப்பெண் அதிரடிப்படை மேற்கொள்ளாது என அப்படையின் ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக, அப்படையைச் சேர்ந்த 70 குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.
அந்தக் குழுக்களுக்குத் தேவைப்பட்டால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்படும் என்றார் அவர்.
“மாநிலம் முழுவதும் பகுதிவாரியாக 270 கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
“அனைத்துப் பேருந்து, ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பெண்கள் அதிகம் பணிபுரியும் மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்,” என்று திருவாட்டி பவானீஸ்வரி கூறினார்.
மேலும், குற்றம் புரிந்தவர்கள் பிடிபடும்போது, அவர்கள் சட்டம் ஒழுங்கு, மகளிர் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்படுவர் என்றும் மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியுள்ளது.
அந்தச் சிறப்புப் படையினர் 316 நான்கு சக்கர வாகனங்கள், 101 இரு சக்கர வாகனங்கள், 49 ஆளில்லா வானூர்திகள் மூலம் சுற்றுக்காவல், கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது காவல்துறையின் அவசர உதவி அழைப்புக்கான எண்கள் 100, 112 வாயிலாகப் பெண்களிடம் இருந்து தகவல்கள் பெறப்படுகின்றன என்றும் அதிரடிப்படையைத் தொடர்புகொள்ள சிறப்பு உதவி எண்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் திருவாட்டி பவானீஸ்வரி கூறினார்.

