புதிய அரசியல் இயக்கம்; அண்ணாமலை அறிவிப்பு

புதிய அரசியல் இயக்கம்; அண்ணாமலை அறிவிப்பு

2 mins read
17684b7d-4f27-4810-bc8e-a8c951607983
அண்ணாமலையின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக பாஜக வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிவித்தது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகுவதற்கான பதவி விலகல் கடிதத்தைக் கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார்.

இந்நிலையில், அவரது பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக பாஜக வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிவித்தது.

இந்நிலையில், அண்ணாமலை தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாகப் பேசினார்.

“நான் 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தேன். தமிழக மக்களுக்காக ஆறு ஆண்டு காலம் பணியாற்றுவதற்குப் பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதைப் பெரிய வரமாகக் கருதுகிறேன்,” என்று அண்ணாமலை கூறினார்.

“எனக்கு பெரிய இலக்குகள் உள்ளன. அதிக மக்களை இணைத்துச் செயல்பட வேண்டும். ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்பதை பாஜக தலைவர்களிடம் பண்போடு சொல்லிவிட்டு அந்த இயக்கத்திலிருந்து வெளியே வந்துள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“எனது அரசியல் பாதை எளிதானது அல்ல. ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் நான். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது.

“நான் காவல்துறை பதவியை விட்டு விலகிய பிறகு எனக்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நான் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் பேசினார். நான் அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

“அப்போது, தமிழ்நாட்டுக்கு எது நல்லது; ரஜினிகாந்துக்கு எது நல்லது; அண்ணாமலைக்கு எது நல்லது என்ற மூன்று விஷயங்கள்தான் என் கண் முன்பாக இருந்தன. நான் பாஜகவில் இணைவதாக பி.எல். சந்தோஷ் அவர்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனால் அதை மீறக்கூடாது என நான் கருதினேன்.

“பாஜகவில் நான் இருந்தபோது பல தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அப்போது முடிவெடுத்தோம். அதேபோல், மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்து அவ்வாறே போட்டியிட்டோம்.

“எனக்கும் இன்னொரு கட்சிக்குமான தனிப்பட்ட பிரச்சினை அல்ல அது. பாஜக தமிழர் அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம்,” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

பாதிப்பு இல்லை

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஓர் இயக்கம் அல்லது கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

அண்ணாமலையின் அறிவிப்புக்குப் பிறகு அந்தப் புதிய இயக்கத்தில் 50,000க்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளனர். அண்ணாமலைக்கு இளையர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இனிவரும் நாள்களில் அவரின் புதிய இயக்கத்தில் மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்