மாதிரி வாக்குச்சாவடி பேருந்து: சென்னையில் புது முயற்சி

மாதிரி வாக்குச்சாவடி பேருந்து: சென்னையில் புது முயற்சி

1 mins read
b5d56281-7d5d-44c2-ba2b-f7aa2adf40b1
‘நடமாடும் வாக்குச்சாவடி’ போன்று வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்துக்குள் நுழையும் இளம் வாக்காளர்களுக்கு உண்மையான, வாக்குச்சாவடிக்குள் நுழைந்த உணர்வைப் பெறுவர். - படம்: கல்கி ஆன்லைன்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இந்நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வுச் செய்திகளைத் தாங்கிய ராட்சதப் பிரம்மாண்ட பலூன்கள், சென்னை நகராட்சியின் ரிப்பன் கட்டடம், அண்ணா சாலை, கோயம்பேடு மேம்பாலத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

இதன்மூலம் ‘தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் மாபெரும் கொண்டாட்டம்’ எனும் நிகழ்வில் பங்கேற்குமாறு வாக்காளர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், மற்றொரு சிறப்பு ஏற்பாடாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடிப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

‘நடமாடும் வாக்குச்சாவடி’ போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துக்குள் நுழையும் இளம் வாக்காளர்களுக்கு உண்மையான, வாக்குச்சாவடிக்குள் நுழைந்த உணர்வைப் பெறுவர். அதற்கேற்ப பேருந்தின் உட்புறம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நாளன்று முதல் முறையாக வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் அலுவலர்கள் எங்கு அமர்ந்திருப்பார்கள் என்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிரி, வாக்குச்சாவடிக்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான குறிப்புகள் என அனைத்தும் புரிபடும்.

முதல் முறையாக வாக்களிக்கும் இளையர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பேருந்திற்குள் சென்று செயல்முறை விளக்கங்களைக் கேட்டறிகின்றனர்.

குறிப்புச் சொற்கள்