எட்டு இடங்களில் சிறு துறைமுகங்கள்; தமிழக கடல்சார் வாரியம் திட்டம்

எட்டு இடங்களில் சிறு துறைமுகங்கள்; தமிழக கடல்சார் வாரியம் திட்டம்

2 mins read
3d01229b-6db4-41a2-aebf-4e0e0d8d179e
40 ஆண்டுகளுக்கு பின், கடலுார் துறைமுகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் எட்டு இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், 40 ஆண்டுகளுக்குப்பின், கடலுார் துறைமுகத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வர தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கி வரும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் கட்டுப்பாட்டில் 17 சிறு துறைமுகங்கள் உள்ளன. பல்வேறு மாவட்டங்களில் உள்ள அவற்றில் சில, சரியான செயல்பாடு இன்றி உள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு கடல்சார் வாரிய இயக்குநர் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது செயல்பாட்டில் இல்லாத சிறு துறைமுகங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதன் வாயிலாக, தமிழக கடல்சார் வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும் என்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கடந்த அதிமுக ஆட்சியில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்த முடியாமல் போனது. இந்த துறைமுகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

“இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு - முகையூர், பனையூர், விழுப்புரம் - மரக்காணம், கடலுார் - சிலம்பிமங்களம், நாகப்பட்டினம் - விழுந்தமாவடி, துாத்துக்குடி - மணப்பாடு, மயிலாடுதுறை - வானகிரி, கன்னியாகுமரி ஆகிய எட்டு இடங்களில், சிறு துறைமுகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

“இதற்கான முதலீட்டாளர்களுக்கு, தமிழ்நாடு கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த துறைமுகங்கள், 30 முதல் 99 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்பட உள்ளன.

“இங்கு கடல் சுற்றுலா போக்குவரத்து, கப்பல் கட்டுமான தொழில், மீன் உணவு தொழில்களை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என அரசுத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
துறைமுகம்ஒப்பந்தம்புரிந்துணர்வுநெடுஞ்சாலைஇறக்குமதி