அமைச்சர்கள் தவறு செய்தால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும்: விஜய்

அமைச்சர்கள் தவறு செய்தால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும்: விஜய்

1 mins read
34962c0d-5c11-4190-88fb-cdc1568c4371
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது. - கோப்புப் படம்: கல்கி ஆன்லைன்
Google News Preferred Icon

சென்னை: அமைச்சர்கள் தவறு செய்தால் உடனடியாக அவர்களுடைய பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.

அப்போது, தவெக அரசைத் தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தமது அரசு முழுமையாக, மக்களுக்கான அரசாக செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

“யாரும் ஊழல் செய்ய நினைக்கக்கூடாது. ஊழல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன்,” என்று விஜய் எச்சரித்ததாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

அமைச்சர்கள் தங்கள் துறையை நேர்மையாகவும் பொறுப்புடனும் நிர்வகிக்க வேண்டியது அவர்களுடைய கடமை என்றார் முதல்வர் விஜய்.

எந்தத் துறையிலும் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், எந்தத் துறையில் தவறு நடந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தயாரிப்புகள், துறை வாரியான குற்றங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சர்களின் செயல்பாடுகள் மாணவர்களைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்றும் அமைச்சர்கள் ஆய்வுக்காக பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போது எந்தவிதமான காணொளிகளையும் பதிவு செய்யக்கூடாது என்றும் முதல்வர் விஜய் மேலும் கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது‌.

குறிப்புச் சொற்கள்