வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தியவர்கள் கைது: அமைச்சர்

வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தியவர்கள் கைது: அமைச்சர்

1 mins read
cec2282f-a3ae-42fe-96a9-ede0239190e2
அமைச்சர் நிர்மல்குமார். - படம்: நியூஸ் 18
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் ஒருசிலரது சதிவேலையால் ஆங்காங்கே வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தப்படுவதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெறப்பட்ட புகார்களின் பேரில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்துவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் நிர்மல்குமார்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் எங்கெல்லாம் மின்வெட்டு ஏற்படுகிறதோ, அது உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்துறையின் சமூக ஊடகப் பக்கத்தில் இந்த விவரங்கள் உடனுக்குடன் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், தவறான நபர்கள் வேண்டுமென்றே ‘ஃப்யூஸ்’களைப் பிடுங்கி, மின்வெட்டு ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

கண்காணிப்புக் கேமராக்கள் உதவியுடன் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கேமராக்கள் இல்லாத இடத்தில் இத்தகைய செயல்கள் நடக்காதவாறு பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் இரண்டு வீதிகளில் வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. உடனே அது சரிசெய்யப்பட்டது.

“அப்போது சிலரது தூண்டுதலின் பேரில் மக்களைச் சாலைகளில் நிறுத்தி பிரச்சினை செய்தார்கள். ஒருசில இடங்களில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டையும் சரி செய்கிறோம்,” என்றார் அமைச்சர் நிர்மல்குமார்.

குறிப்புச் சொற்கள்
மின்தடைஅமைச்சர்சதித்திட்டம்முதல்வர்விஜய்