போதை இல்லாத் தமிழகத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜ்குமாா்

போதை இல்லாத் தமிழகத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜ்குமாா்

2 mins read
55c9a515-1131-4f89-930d-761ea326e349
கடலூா் மஞ்சக்குப்பத்தில் நடந்த ‘ஸ்டாா்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஓட்டத்தை தொடங்கி வைத்து கலந்துகொண்டார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார். - படம்: தினமணி
Google News Preferred Icon

கடலூர்: தமிழகத்தில் போதைப்பொருள் புழங்காத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் வலியுறுத்தினார்.

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஸ்டாா்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் அமைச்சர் ப. ராஜ்குமாா் கொடியசைத்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பின்னா் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரா்களுடன் இணைந்து ஓட்டத்தில் பங்கேற்றார். இந்த விழிப்புணா்வு ஓட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மஞ்சக்குப்பம் மைதானத்தில் தொடங்கிய ஓட்டம் தேவனாம்பட்டினம் வரை நடைபெற்றது. பின்னர் அமைச்சர் ராஜ்குமார் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவது முதல்வர் ச. ஜோசப் விஜய்யின் முக்கிய நோக்கமாகும். அதற்காக காவல்துறை, வருவாய்த் துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், போதைப்பொருள் பழக்கம் ஒரு தனிமனிதரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் மட்டுமல்லாமல், குடும்பத்தின் அமைதியையும், சமூகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞா்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகாமல், விளையாட்டு, உடற்பயிற்சி, வாசிப்பு உள்ளிட்ட நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

“போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என்றார்.

முன்னதாக, ‘போதையில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம்’ எனப் பெயரிடப்பட்ட ஓட்ட நிகழ்வில் பங்கேற்றோர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

குறிப்புச் சொற்கள்