‘ரீல்’ வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் கீர்த்தனா

‘ரீல்’ வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் கீர்த்தனா

1 mins read
56318cbe-cb39-4763-8f4d-0be007875fba
அமைச்சர் கீர்த்தனா. - படம்: தினமணி

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு சிறு காணொளி (ரீல்ஸ்) மூலம் அழைப்பு விடுத்துள்ளார் தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா.

தவெக ஆட்சியில் தமிழகத்தில் தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் உறுதிமொழி அளித்துள்ளார்.

தமிழகம் எதிர்காலத்தை நோக்கிக் காத்திருக்கவில்லை என்றும் எதிர்காலத்தை உருவாக்கி வருகிறது என்றும் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.

தொழில் தொடங்க விரைவாக அனுமதி வழங்குவது முதல் செயற்கை நுண்ணறிவு, பசுமை ‘ஹைட்ரஜன்’, மின்வெளிப் பொருளியல் வரை புதுமைகள் கொண்ட ஒரு கட்டமைப்பை தமிழகம் உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

இந்தியாவின் முதலீடு, புதுமைகளின் மையமாகத் தமிழகத்தைத் திகழச்செய்ய உறுதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் கீர்த்தனா, எதிர்காலம் தமிழத்தில்தான் உள்ளது என்றும் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலீட்டாளர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அது தொடர்பாக தன்னையும் முதல்வரையும் நேரடியாக கொண்டு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தவெக பெற்றிருப்பது இன்ஸ்டகிராம் வெற்றி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் காணொளி வெளியிட்டு முதலீட்டாளர்களுக்குத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அழைப்பு விடுத்திருப்பது புது விவாதப்பொருளாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
தவெகஅமைச்சர்முதலீடு