திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைப்பகுதியில் தற்போது 93 வாக்காளர்கள் மட்டுமே வசிப்பதாக அரசு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், 1,182 வாக்காளர் சரிபார்ப்புப் படிவங்கள் (SIR) பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாஞ்சோலை எஸ்டேட் மூடப்பட்டதால், அங்கு வசித்த பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர். தற்போதைய ஆய்வின்படி மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் மொத்தம் 93 பேர் மட்டுமே நிரந்தரமாக வசிக்கின்றனர்.
அங்கு வசிக்காதவர்களுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மூலம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பிஎல்ஓக்கள் நேரில் சென்று படிவம் அளித்தாலும் திரும்பப் பெறுவதில் குளறுபடி நடந்துள்ளது.
இந்த முரண்பாட்டால், பிஎல்ஓக்களை “மலைப்பகுதிக்குச் செல்லவில்லை” என்று எழுதித் தருமாறு உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், மாஞ்சோலை மலைப்பகுதியில் வசிக்காத ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கப்பட்டு, விவரங்கள் எவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டது என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

