சுங்கத்துறை அதிகாரியாக நடித்து நகை பறித்தவருக்குக் காவல்துறை வலைவீச்சு

சுங்கத்துறை அதிகாரியாக நடித்து நகை பறித்தவருக்குக் காவல்துறை வலைவீச்சு

1 mins read
4e61656b-f83f-4c18-b49e-df847552815b
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விமானநிலையக் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வுசெய்து வருகின்றனர். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: சுங்கத்துறை அதிகாரியாக நடித்து விமானப் பயணியிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகையைப் பறித்துச் சென்றவருக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 23 வயதான நந்தகோபால் என்ற ஆடவர், செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) இரவு, கோவையிலிருந்து தனியார் விமானத்தில் சென்னை வரும் பெண் பயணி ஒருவருக்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்.

அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு பார்சல் (உறையை) பெற்றுச்செல்ல அவர் வந்திருந்தார். குறித்த நேரத்தில் அந்தப் பெண் வந்துசேர, இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அணுகிய ஒருவர், தம்மைச் சுங்கத்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பின்னர், “நீங்கள் வைத்திருக்கும் பையில் தங்கநகை இருப்பதால் அதுகுறித்து விசாரிக்க வேண்டும்,” என்று கூறிய அவர், அந்த உறையை வாங்கியுள்ளார்.

தம்மைப் பின்தொடர்ந்து வருமாறு கூறிவிட்டு வேகமாக நடந்துசென்ற அவர், ஒரு கட்டத்தில் மாயமாகிவிட்டார்.

அவர் பறித்துச் சென்ற உறையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தன.

அதிர்ச்சியடைந்த நந்தகோபால், விமான நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தபோது, அதிகாரிகள் யாரும் பயணிகளிடமிருந்து தங்க நகைகளைப் பறிமுதல் செய்யவில்லை என்பது உறுதியானது.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விமான நிலையக் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வுசெய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்