முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் காலமானார்

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் காலமானார்

1 mins read
f825541f-11c5-40d7-a036-cff19ff72d2b
குமரி அனந்தன். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.

வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) இரவு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

இலக்கியச் செல்வர் என்று வர்ணிக்கப்பட்ட திரு குமரி அனந்தன், முன்னாள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் அண்ணனுமாவார்.

தமிழ்நாடு அரசின் ‘தகைசால் விருது’ பெற்றவர் திரு குமரி அனந்தன்.

தமிழக சட்டமன்றத்திற்கு ஐந்து முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர் அவர். அத்துடன், 1977ஆம் ஆண்டு நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக திரு அனந்தன் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கும் சென்றார்.

குமரி அனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அவரது நல்லுடல் இறுதி அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்தமிழிசைமரணம்

தொடர்புடைய செய்திகள்