ஆசிரியர் பணிக்குச் செல்லாமல் அரங்கேறிய ஆள்மாறாட்டம்

ஆசிரியர் பணிக்குச் செல்லாமல் அரங்கேறிய ஆள்மாறாட்டம்

1 mins read
6decac58-856b-4364-9d8c-e03eaeb93989
ஆள் மாறாட்டம். - கோப்புப்படம்
Google News Preferred Icon

சென்னை: ஆசிரியர் பள்ளிக்கேச் செல்லாமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உள்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி ஆய்வின்போது கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள், பள்ளிக்கேச் செல்லாமல் நீண்டநாள்கள் விடுப்பில் இருந்தவர்கள், பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பித்த ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதவிர முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்களின் பட்டியலையும் பொதுவெளியில் வெளியிட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்