இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்: திருமாவளவன்

இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்: திருமாவளவன்

2 mins read
f74da9d0-ab4b-433c-9b39-78d186ad24af
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். - படம்: தினத் தந்தி
Google News Preferred Icon

சென்னை: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடக்கவுள்ள இடைத்தேர்தலில், திருமாவளவன் போட்டியிடப் போவதாகப் பரவிய வதந்திகளுக்கு, அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவான விளக்கமளித்துள்ளார்.

போட்டியிட வாய்ப்பே இல்லை

“திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் போட்டியிடப் போவதாகப் பேசிக் கொள்கிறார்கள். 100 விழுக்காடு எந்த இடைத்தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். இதுகுறித்து முதலமைச்சர் விஜய்யிடமே நான் ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டேன்.

“எனக்கு அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்னை வற்புறுத்தியது உண்மைதான், ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

“தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணி சிதறிவிட்டது. அதற்கான உண்மையான காரணத்தை ஆராயாமல், கடைசி நேரத்தில் நாம் எடுத்த முடிவை மட்டுமே பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது தொண்டர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

தன்னை நோக்கி வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திருமாவளவன் சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“பதவி ஆசை இருந்திருந்தால் முதல்முறையாக எம்எல்ஏ ஆன இரண்டே ஆண்டுகளில் என் பதவியை விட்டு விலகியிருப்பேனா?

“மத்தியில் பாஜக அமைச்சரவையில் சேர அழைப்பு வந்தபோதே அதை உதறித் தள்ளியவன் நான்.

“அதிமுக அணியில் சேர்ந்திருந்தால் அதிக இடங்கள் கிடைத்திருக்கும்; தவெக அணியில் சேர்ந்திருந்தால் துணை முதல்வர் பதவிகூட கிடைத்திருக்கும் என்று அழைப்புகள் வந்தன. பதவி ஆசை இருந்திருந்தால் அங்கெல்லாம் போயிருக்கலாமே? எனக்காக வாதாட இங்கு யாரும் இல்லை,” என்று திருமாவளவன் உருக்கமாகப் பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்