தொழில்நுட்பம், உற்பத்தி விரிவாக்கத்திற்காக ஹுண்டாய் நிறுவனம் ரூ.45,000 கோடி முதலீடு

தொழில்நுட்பம், உற்பத்தி விரிவாக்கத்திற்காக ஹுண்டாய் நிறுவனம் ரூ.45,000 கோடி முதலீடு

2 mins read
c927883f-aa80-4087-9b79-fffe51aed72e
மொத்த முதலீட்டில் 40 விழுக்காடு உள்ளூர்மயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு செலவிடப்படும் என ஹுண்டாய் நிறுவனம் கூறியுள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: தொழில்நுட்பம், உற்பத்தி விரிவாக்கத்திற்காக பிரபல ஹுண்டாய் நிறுவனம் சென்னையில் ரூ.45,000 கோடி முதலீடு செய்துள்ளது.

இத்தகைய பெரும் முதலீடுகள் காரணமாக, வளர்ச்சியின் மையப்புள்ளியாக சென்னை மாநகரம் மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில் ஹுண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு நவீன தொழில்நுட்பம் மூலம் புதிதாக உற்பத்தியாகும் கார்களைச் சோதனை செய்கின்றனர்.

மின்னிலக்க முறையில் வாகனங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிப்பதுடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் கார்களின் தரம், அனைத்துலக தரத்திற்கு இணையாக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.

திருப்பெரும்புதூர் ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள ஹுண்டாய் நிறுவனம், மின்னிலக்க மாற்றமே ஹுண்டாயின் அடுத்தகட்ட பிரம்மாண்ட முதலீட்டிற்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ரூ.45,000 கோடி முதலீட்டை தற்போது உறுதி செய்துள்ளது.

இந்தத் தொகையானது, திருப்பெரும்புதூர் ஆலையில் தயாரிக்கப்படும் கார்களின் தயாரிப்பு மேம்பாடு, புதிய தொழில்நுட்பம், உற்பத்தி விரிவாக்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்த முதலீட்டில் 40 விழுக்காடு உள்ளூர் மயமாக்கல், சுற்றுச்சூழல் அமைப்பு மேம்பாட்டிற்குச் செலவிடப்படும்.

“இந்த ஆலையில் 200 நேரலை ‘ரோபோட்டிக்’ கருவிகள் மூலம் உற்பத்தி கண்காணிக்கப்படுகிறது. ஊழியர்களுக்கு நவீன சூழலுக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

“மகாராஷ்டிராவில் புதிய ஆலை தொடங்கப்பட்டிருந்தாலும், ஹுண்டாய் வாகனத் தயாரிப்பின் இதயமாக சென்னையே தொடர்கிறது. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள வலுவான விநியோகிப்பாளர் வலையமைப்பும் பல்லாண்டுகால அனுபவமும் சென்னையை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றியுள்ளது,” என்று ஹுண்டாய் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்