கடும் பனிமூட்டம்: சென்னையில் 40 விமானங்கள் பாதிப்பு

கடும் பனிமூட்டம்: சென்னையில் 40 விமானங்கள் பாதிப்பு

1 mins read
85b31fb7-47f0-4865-a160-d01e6e85159b
கடும் பனிமூட்டத்தால் சுமார் 40 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: சென்னையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) சென்னை விமான நிலையத்தில் 40 விமானங்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

விடியற்காலையில் நிலவிய அடர் பனிமூட்டத்தால் விமான ஓடுதளம் சரியாகத் தென்படாத சூழல் உருவானது. அதன் விளைவாக மும்பை, கோலாலம்பூர், புனே, பெங்களூரு, ஹைதராபாத், துபாய் ஆகிய இடங்களிலிருந்து வந்த 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.

பின்னர் அந்த விமானங்கள் பெங்களூரு, கோவை, திருப்பதி ஆகிய நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

அதுபோல் இலங்கை, திருவனந்தபுரத்திலிருந்து வந்த 12 விமானங்கள் வானிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுப் பின்னர் காலதாமதமாகத் தரையிறங்கின.

சென்னயிலிருந்து டெல்லி, கோல்கத்தா, அந்தமான், திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய 21 விமானங்களும் பனிப்பொழிவு காரணமாகத் தாமதமானது பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்தமாக 40 விமானங்களின் சேவை இந்த வானிலை மாற்றத்தால் தடைப்பட்டன.

காலை 9 மணிக்கு மேல் வெயில் வரத் தொடங்கியதும் பனிமூட்டம் படிப்படியாகக் குறைந்து விமானச் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின.

மற்ற நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்ட விமானங்கள் ஒவ்வொன்றாக மீண்டும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுத் தரையிறக்கப்பட்டன.

இதனால் சில மணி நேரங்கள் நிலவிய பதற்றமான சூழல் தணிந்து விமான நிலையப் பணிகள் சீரடைந்தன.

குறிப்புச் சொற்கள்