சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண் பயணி ஒருவர், பசை வடிவில் தங்கம் கடத்தி வந்தார் என்றும் இதுகுறித்து ரகசியத் தகவல் கிடைத்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தகவலின் பேரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்களில் பயணம் மேற்கொண்ட அனைத்துப் பயணிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர்.
அப்போது ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்படவே, அவரது உடைமைகளை சுங்கத்துறையின் வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் தங்கத்தைப் பசை வடிவில் மாற்றி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தங்கத்தை மறைத்து கடத்தி வந்த அந்தப் பெண் பயணி தடுத்து வைக்கப்பட்டார்.
இதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் மூன்று பயணிகள் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு, அவர்களின் உடைமைகளும் சோதனையிடப்பட்டன. அப்போது அம்மூவரும் கடத்தி வந்த தங்க நகைகள், வெளிநாட்டு ஹவாலா பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
செவ்வாய்க்கிழமை மட்டும் இவ்வாறு நான்கு பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு, ரூ.4.09 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


