காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு சிறார் காப்பகத்திலிருந்து நான்கு சிறுமியர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் தாத்திமேடு பகுதியில், தமிழ்நாடு அரசின் குழந்தைகள் மற்றும் சிறப்புச் சேவை துறை சார்பாக அரசு சிறார் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
அந்த விடுதியில் 30க்கும் மேற்பட்ட சிறுமியர் தங்கி, கல்வி பயின்று வருகின்றனர்.
அங்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) நள்ளிரவு நெருங்கிய வேளையில், மூன்று பாதுகாவலர்களும் அங்குள்ள சிறுமியரிடம் பேசிவிட்டு, காப்பகத்தைப் பூட்டினர். சாவியை அங்கு பணிபுரியும் ஷோபனா என்பவரிடம் ஒப்படைத்தனர்.
சிறிது நேரத்தில் ஷோபனா தூங்கச் சென்றார். அப்போது சிறார் காப்பகத்தில் இருந்த நான்கு சிறுமியர், ஷோபனா தூங்கிவிட்டதை உறுதிசெய்த பின்னர், அவரிடம் இருந்து சாவியை மெதுவாக எடுத்தனர்.
பின்னர் வாயிற்கதவைத் திறந்து, காப்பகத்தின் பின்பக்கம் உள்ள மதில் சுவர் மீது ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
தப்பித்த நான்கு சிறுமியரில் மூவர் குன்றத்தூர் பகுதியையும் ஒருவர் காஞ்சிபுரம் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் விசாரித்து அறிந்தனர்.
சிறுமியர் தப்பிச் சென்றது குறித்து அரசு அலுவலர் மற்றும் காஞ்சிபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
காப்பகத்தின் மதில் சுவர் மீதிருந்த இரும்பு வலை துருப்பிடித்து இருந்ததால் அதனை நீக்கிவிட்டு புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரும்பு வலை அகற்றப்பட்டதைச் சாதகமாகப் பயன்படுத்தி சிறுமியர் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
சிறுமியர் ஏன் தப்பினர், எங்கு சென்றனர் என்று விசாரித்து வரும் காவல்துறை, அந்த நால்வரையும் தேடி வருகின்றனர்.

