உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

2 mins read
c8e48be2-dcf5-4791-ac05-d13832953a8e
தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த இரு நாள்களில் நகரக் கூடும் என்றும், மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கெனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக தெற்கு வங்கக் கடலில் நிலவி வந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.

இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போதைக்கு இது புயலாக மாறுமா என்பது குறித்த எந்தத் தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை.

அதேவேளையில், இது தமிழகத்தை நோக்கி நெருங்கி வர வர, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும், குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது செவ்வாய், புதன் (டிசம்பர் 17, 18) தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 18ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

19ஆம் தேதி வியாழக்கிழமையன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதன் நகர்வைப் பொறுத்து கனமழை பெய்யும் இடங்கள் மாறுபடலாம் என்றும், உள்ளூர் மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

முன்பு உருவான புயல் சின்னங்களைப் போலவே, இது கணிக்கப்பட்டதைக் காட்டிலும் தாமதமாகவே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியிருப்பதால், அடுத்தடுத்த நகர்வுகளைத் துல்லியமாக கணித்தே நிலவரங்களை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்