வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; முழுவீச்சில் தேர்தல் பரப்புரையில் கட்சிகள்

ஏப்ரல் 23 தேர்தலுக்கு தயாரான தமிழகம்

வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; முழுவீச்சில் தேர்தல் பரப்புரையில் கட்சிகள்

2 mins read
05d8a576-100d-4008-98b8-c38f2ebed394
இறுதிநாளான திங்கட்கிழமை (ஏப்ரல் 6) வேட்புமனுத் தாக்கல் செய்த அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர். - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் முழுமையாக ஆயத்தமாகிவிட்டது. மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) பிற்பகல் 3 மணியுடன் (இந்திய நேரப்படி) அனைத்து 234 தொகுதிகளிலும் நிறைவடைந்தது.

கடைசி நாளில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், துரைமுருகன், பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை சௌந்தரராஜன், செல்வப் பெருந்தகை, உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனுத் தாக்கல் செய்தார். - படம்: தினமணி

கடைசி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அலைமோதியதால், பல இடங்களில் தேர்தல் அலுவலகங்கள் பரபரப்பாகக் காணப்பட்டன.

வேட்பாளர்கள் ஒரு பக்கம் மனுத் தாக்கல் செய்வதிலும், இன்னொரு பக்கம் மக்களைக் கவர விதவிதமான பரப்புரைகளிலும் ஈடுபட்டனர்.

மனுத் தாக்கல் தொடங்கிய அன்றே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் மும்முரமாக வேலை செய்கின்றன.

கூடவே, நாதக, தவெக, ராமதாஸ் - சசிகலா கூட்டணி எனப் பலமுனை போட்டி நிலவுவதால் களம் சூடுபிடித்துள்ளது.

வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளனர். அவர்களை ஆதரித்து கட்சித் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 இறுதிப் பட்டியல் ஏப்ரல் 9

இதுவரை ஆயிரக்கணக்கானோர் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நடைபெறும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்படும். உரிய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மனுக்கள் ஏற்கப்பட்டும் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாள். அன்று 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்