தேர்வு ரத்து: டிஎன்பிஎஸ்சி குளறுபடிக்குத் தலைவர்கள் கண்டனம்

தேர்வு ரத்து: டிஎன்பிஎஸ்சி குளறுபடிக்குத் தலைவர்கள் கண்டனம்

2 mins read
89904d5a-b630-4010-ab8a-ff0c71367875
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள EVR பெரியார் சாலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வந்தவர்கள் நடத்திய போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. - தி இந்து
Google News Preferred Icon

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகள், தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்தத் தடுமாற்றத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இது குறித்துக் கூறுகையில், அரசுப் பணிக்கான தேர்வைக் கூடச் சரியாக நடத்த முடியாத நிலையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும் திமுக அரசும் உள்ளதாகச் சாடினார்.

தேர்வு எழுதுபவர்களை அலைக்கழித்துத் தவிக்கவிட்ட நிர்வாகத்தின் செயல் திமுக அரசின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், குரூப்-2 போன்ற மிக முக்கியமான ஒரு தேர்வு நடைபெறும் நாள் அன்று தேர்வைத் தள்ளிவைப்பது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனச் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை ஆளும் அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரு போட்டித் தேர்வைக் கூடக் குழப்பம் இல்லாமல் நடத்த முடியாத நிலையில் அரசு உள்ளதாகக் குறை கூறினார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்தச் சிக்கல் தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சதியா என்பதைப் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வரின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் பாஜக முன்னாள் தலைவர்கள் தமிழிசை, அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுஇந்தியாதேர்வுரத்து

தொடர்புடைய செய்திகள்