சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) தொடங்கியது.
அதற்காக திமுக அழைத்த குழுவுக்கு டி.ஆர். பாலு எம்.பி. தலைமை ஏற்றுள்ளார்.
இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில் நீடிக்கின்றன.
அத்துடன், புதிதாக மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவும் இணைந்துள்ளன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதல் நாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அது அதிகாரபூர்வ பேச்சு வார்த்தை என்றாலும் ஏற்கெனவே மூத்த அமைச்சர்கள் ஒவ்வொரு கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை ரகசியமாக நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, இன்றைய அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தையின்போது, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்து வாங்கப்படும் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
திமுகவிடம் ஐந்து தொகுதிகளைக் கேட்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது. 2021 தேர்தலில் 3 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது.
மதிமுகவுடன் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. தற்போது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்க மதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியுடனும் திங்கட்கிழமை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது திமுக.
வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வென்றது. தற்போது அந்தக் கட்சியும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள தேதியை திமுக இன்னும் வெளியிடவில்லை.
இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 28, தேமுதிகவுக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, மதிமுகவுக்கு 6, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, ஓ.பன்னீர்செல்வத்திற்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மீதமுள்ள 167 தொகுதிகளில் திமுக போட்டியிடக்கூடும்.

