சுட்டெரிக்கும் வெயிலிலும் நட்சத்திரங்கள் மின்னியும் பயனில்லை என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தி வருகிறது. பெரும்பாலும் திரைப்பட வாய்ப்பு இல்லாத நடிகர், நடிகைகளைத் தேர்தல் பிரசாரத்தில் காணமுடியும். இப்போதும் அப்படித்தான். கேப்டன் விஜயகாந்தால் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் பொன்னம்பலம், திமுகவுடன் தேமுதிக கூட்டு சேர்ந்திருப்பதற்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து வருகிறார். ஒரு காலத்தில் திருச்செந்தூர்த் தொகுதி அதிமுக எம்பியாக இருந்த ‘கரகாட்டக்காரன்’ ராமராஜனும் தவெகவுக்கு ஆதரவாக ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் விபின் சக்ரவர்த்திக்கு வாக்கு கேட்டு வருகிறார்.
ராமராஜனின் முன்னாள் மனைவி நளினி திருவள்ளூர் திமுக வேட்பாளர் விஜி ராஜேந்திரனுக்கு ஆதரவாகக் கடந்த வாரம் பிரசாரம் செய்தார். நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் நாளை மறுநாள் (ஏப்ரல் 17) முதல் பிரசாரம் ஓயும் வரை திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதிமுக-பாஜகவுக்கு ஆதரவாக நடிகைகள் கௌதமி, விந்தியா நடிகர்கள் சரத்குமார், வையாபுரி ஆகியோர் பிரசாரக் களத்தில் உள்ளனர். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர் மனோகரை ஆதரித்து இமான் அண்ணாச்சி பிரசாரம் செய்தார். அவினாசி (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளர் எல் முருகனுக்கு ஆதரவாக சின்னத்திரை நட்சத்திரங்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பாஜக இம்முறை பிரசாரத்திற்கு மட்டுமே திரை நட்சத்திரங்களைப் பயன்படுத்துவதைக் கவனிக்கலாம். 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கில் நடிகை குஷ்புவுக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் நடிகை ராதிகாவுக்கும் வாய்ப்பளித்ததுபோல இம்முறை நடந்துவிடாதபடி நயினார் நாகேந்திரன் பார்த்துக்கொண்டார். அதனால், கொளத்தூரில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட ஆர்வமாக இருந்த நடிகை கஸ்தூரிக்கு ‘நோ’ சொன்னது பாஜக.
அதேவேளை, அண்மையில் நடைபெற்று முடிந்த கேரளத் தேர்தலில் அஞ்சலி நாயர், லட்சுமி பிரியா, வீணா நாயர் ஆகிய நடிகைகள் தாமரையில் போட்டியிட்டனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.
அதிமுக கடந்த சில தேர்தலைகளைப்போல இப்போதும் திரையுலகத்தினரை வேட்பாளராக்கவில்லை. ராஜபாளையத்தில் போட்டியிட விரும்பிய கௌதமியையும் அக்கட்சி கண்டுகொள்ளவில்லை. ஆயினும் இரட்டை இலையில் போட்டியிடும் ஒற்றை நடிகராக சுந்தர் சி உள்ளார். திமுக சார்பாக உதயநிதி, ஆதரவுக் கட்சி சார்பாக கருணாஸ், லால்குடியில் சுயேச்சையாக மன்சூர் அலிகான் ஆகியோர் இப்போது போட்டியிட்டாலும் முந்தைய தேர்தல்களிலேயே களம் கண்டவர்கள் அவர்கள்.
ஆக, கமல் உட்பட திரை நட்சத்திரங்கள் எவரையும் புதிதாகத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு மனமில்லை என்பதால் அதனைப் பிரதிபலிக்கும் விதமாக கட்சிகளும் அவர்களை பிரசாரத்திற்கு மட்டும் பயன்படுத்தும் போக்கு இத்தேர்தலில் தெளிவாகத் தெரிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் தோல்வியடைந்ததோடு டெபாசிட் தொகையையும் இழந்தார். திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் அரசியலில் மறையும் நட்சத்திரங்களாக மாறத்தொடங்கியதை அப்போதே காணமுடிந்தது. ஆயினும், தனி ஒருவனாக நடிகர் விஜய் புறப்பட்டிருக்கிறார். விளைவை விரைவில் காண்போம். -திருநா

